வெலிங்டன் ராணுவ முகாமில், பயிற்சி முடித்த 274 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்தனர்
வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்த 274 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே வெலிங்டனில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் ராணுவ முகாம் அமைந்து உள்ளது. இங்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களை சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இந்திய ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 46 வாரங்கள் போர் திறன், ஆயுதங்களை கையாளுதல், இந்தி மொழி பேசுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி முடித்த வீரர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டு ராணுவ பணிக்கு செல்கின்றனர்.
அதன்படி எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் உள்ள நாகேஷ் பேரக்சில் நேற்று பயிற்சி முடித்த 274 வீரர்கள் சத்திய பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பிரிகேடியர் குரையா தலைமை தாங்கி, வீரர்களுக்கு சத்திய பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். முன்னதாக சத்திய பிரமாணம் எடுத்து கொண்ட வீரர்கள் பகவத் கீதை, குரான், பைபிள் ஆகிய புனித நூல்கள் மற்றும் உப்பு அடங்கிய தாம்பூல தட்டில் கை வைத்து உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், சத்திய பிரமாணம் எடுத்த வீரர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.