உயர் அதிகாரியுடன் மோதலால் மாயமான கேரள போலீஸ் இன்ஸ்பெக்டர் கரூரில் மீட்பு

உயர் அதிகாரியுடன் மோதலால் மாயமான கேரள போலீஸ் இன்ஸ்பெக்டர் கரூரில் மீட்கப்பட்டார்.;

Update: 2019-06-15 23:15 GMT
திருச்சி,

கேரள மாநிலம் கொச்சி சென்ட்ரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் நவாஸ்(வயது 50). கடந்த 12-ந் தேதி இவரும், இவருடைய உயர் அதிகாரியும் வாக்கி-டாக்கியில் பேசியபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன விரக்தியில் இருந்த நவாஸ், வாக்கி-டாக்கி மற்றும் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு போலீஸ் நிலையத்தை விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, கொச்சி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நவாசை கேரள போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இது குறித்து தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

இந்தநிலையில் மாயமான இன்ஸ்பெக்டர் நவாஸ் நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டு இருப்பதாக கரூர் போலீசாருக்கு சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்தது. உடனே கரூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் தலைமையிலான போலீசார் அதிகாலை 4.30 மணி அளவில் கரூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒவ்வொரு பெட்டியாக ஏறி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இன்ஸ்பெக்டர் நவாஸ் அமர்ந்து இருந்ததை பார்த்தனர்.

உடனடியாக அவரை கீழே இறக்கி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார். இதையடுத்து அவரை ரெயில்வே போலீசார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து மீண்டும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.

மேலும், இதுகுறித்து கேரள போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை 7.30 மணி அளவில் மலம்புழா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜலீல் தலைமையில் கரூர் வந்த கேரள போலீசார், அங்கு அவரை அழைத்துச் செல்வதற்காக போலீஸ் நிலையத்தில் உள்ள ஆவணத்தில் கையெழுத்து போட்டனர். பின்னர் கேரள போலீசார், இன்ஸ்பெக்டர் நவாசை பாதுகாப்புடன் கொச்சிக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்