போச்சம்பள்ளி அருகே மின் கம்பம் உடைந்து விழுந்து 3 பேர் படுகாயம்
போச்சம்பள்ளி அருகே மின் கம்பம் உடைந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ரெட்டிப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மின் கம்பங்களின் அடிப்பகுதி சேதமடைந்து உள்ளன. இந்தநிலையில் நேற்று முத்து என்பவருடைய வீட்டு முன்பு இருந்த மின் கம்பம் திடீரென உடைந்து கீழே விழுந்தது. அப்போது வீட்டுக்கு வெளியில் இருந்த முத்து, அவருடைய மகள் மேகவர்ஷினி, முத்துவின் அக்கா மகன் ராகவா ஆகிய 3 பேர் மீது மின் கம்பம் விழுந்தது.
இதில் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மின் கம்பம் உடைந்து விழுந்ததால் அந்தபகுதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், ரெட்டிப்பட்டி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கம்பங்கள் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. தற்போது மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்று அடித்தால் மின் கம்பங்கள் சாய்ந்தும், உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளன. சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. தற்போது மின் கம்பம் உடைந்து விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மின்வாரிய செயற்பொறியாளர் வேல் கூறுகையில், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.