நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்திரராஜன் பேட்டி
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்திரராஜன் தர்மபுரியில் கூறினார்.
தர்மபுரி,
சி.ஐ.டி.யு. தொழிற்சங்க 11-வது மாநாடு தர்மபுரியில் நேற்று தொடங்கியது. இதையொட்டி தர்மபுரியில் நேற்று மாலை ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தெய்வானை வரவேற்றார். மாவட்ட செயலாளர் நாகராஜன், மாநில துணை தலைவர் சந்திரன், மாநில செயலாளர் கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்திரராஜன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சவுந்திரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அரசு வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் விதமாக உள்ளன. மோட்டார் வாகன சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது கடுமையான எதிர்ப்பினாலும், போராட்டத்தினால் நிறுத்திவைக்கப்பட்ட சட்டமாகும்.
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்குக் கீழே சென்று விட்டது. தமிழ்நாட்டில் சுமார் 75 சதவீத ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய நிலையை தாண்டி சென்றுள்ளதாக அரசே தெரிவித்து வருகிறது.
நீர்நிலைகளை பாதுகாப்பு செய்து நிலத்தடி நீரை செறிவூட்டுவற்கு அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக போதிய நிதியை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கடந்த ஆண்டு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் விளைவாக தற்போது மக்கள் குடிதண்ணீருக்காக பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். குடிநீர் பிரச்சினையை தீர்க்க அனைத்து பகுதிகளிலும் அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அறிவிப்பு நிலையிலேயே உள்ளது.
இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்லும் நிலை தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது. இதை மாற்றுவதற்கு இங்கேயே சிப்காட் தொழிற்பேட்டையை தொடங்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.