ஜவ்வாதுமலை கோடை விழாவில் குவிந்த சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்

ஜவ்வாதுமலை கோடை விழாவை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் அவர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகள் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

Update: 2019-06-15 23:00 GMT
திருவண்ணாமலை,

ஜவ்வாதுமலையில் 22-ம் ஆண்டு கோடை விழா நேற்று தொடங்கியது. கோடை விழாவை காண காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை, போளூர், வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஜவ்வாதுமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோடை விழாவையொட்டி ஜவ்வாதுமலையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு துறையினரும் போட்டி போட்டு அரங்குகளை அமைத்திருந்தனர். குறிப்பாக தோட்டக்கலைத்துறையினர் கண்காட்சியின் நுழைவு வாயிலை பல்வேறு வகையான காய்கறி, பழங்களால் அமைத்திருந்தனர். மேலும் மலர்களால் ஆன வாத்துகள் ஒன்றுடன் ஒன்று பார்த்தவாறு அமைக்கப்பட்டு இருந்ததை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். மலர் கண்காட்சிக்குள் பல்வேறு வகையான மலர்களை கொண்டு இதயம் (காதல் அடையாளம்) அமைக்கப்பட்டு இருந்தது. இவற்றின் முன்பு நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் சார்பில் கைவினை பொருட்கள் விற்பனையகம், வேளாண்மை துறை சார்பில் வேளாண் கருவிகள் கண்காட்சி போன்றவை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்வையிட்ட அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வெல்லமண்டி ந.நடராஜன், எம்.சி.சம்பத், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் சிறப்பாக உள்ளது என பாராட்டினர்.

விழாவை முன்னிட்டு ஜமுனாமரத்தூர் ஏரியில் முதல் முறையாக ரிவர் கிராசிங், கமாண்டோ நெட், பர்மா பிரிட்ஜ், வாட்டர் வால்கிங் பால் உள்பட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் இடம் பெற்று இருந்தன. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்துகொண்டனர். அதேபோல் மிதிவண்டி படகு போட்டி, வாத்து பிடிக்கும் போட்டிகளும் நடத்தப்பட்டது.

மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து இடைவிடாது தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் உள்பட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அத்துடன் வாலிபால், கபடி, ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

ஜவ்வாதுமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள், பொருட்களின் விற்பனைக்காக ஜவ்வாதுமலையில் உள்ளூர் சந்தை அமைக்கப்பட்டு இருந்தது. இவற்றை ஏராளமான மக்கள் பார்வையிட்டு, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோடை விழா நிறைவு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கோடை விழாவையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் ஜவ்வாதுமலை திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.

மேலும் செய்திகள்