குரூப்-4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா: வேலூர் மாவட்ட அரசுப்பணிகளில் 80 சதவீதம் பேர் வெளிமாவட்ட ஊழியர்கள் வருவாய் அலுவலர் பார்த்திபன் பேச்சு
வேலூர் மாவட்ட அரசுப்பணிகளில் 80 சதவீதம் பேர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறினார்.
வேலூர்,
வேலூரில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ரா. மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஓய்வுப்பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் ராசகோபாலன், ஆசிரியர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்நிலை நூலகர் பழனி வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன் கலந்துகொண்டு போட்டி தேர்வுக்கான பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
குரூப்-4 போட்டி தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்பட பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுத தகுதியானவர்கள் ஆவர். எனவே இத்தேர்வை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இன்றைய காலக்கட்டத்தில் போட்டி தேர்வுகள் என்பது எளிதாக இருக்காது. எனவே தேர்வர்கள் தினசரி நாளிதழ்கள், மாதிரி வினாத்தாள்களை மட்டும் தேர்வுக்காக படிக்கக்கூடாது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களை முழுமையாக படித்தாலே போதுமானது. குறிப்பாக அடிப்படை தமிழ், வரலாறு, இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றுக்கு தேர்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க வேண்டும். போட்டி தேர்வுகளில் வேலூர் மாவட்டத்தை விட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். வேலூர் மாவட்ட அரசுப்பணிகளில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 80 சதவீதம் பேர் பணியாற்றி வருகின்றனர். போட்டி தேர்வுக்கு வேலூர் மாவட்டத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லையா? என்று எண்ண தோன்றுகிறது.
தேர்வர்கள் தாங்கள் படிக்கும் புத்தகங்களில் உள்ள வினா-விடைகளை மட்டும் மனப்பாடம் செய்யாமல், புதிதாக வினா-விடைகளை தயார் செய்ய வேண்டும். அப்போதுதான் தேர்வில் குழப்பமின்றி பதில் அளிக்க முடியும். போட்டி தேர்வுகளுக்கு சிறப்பாக தயாரானால் எளிதில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி வகுப்பில் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வருகிற ஆகஸ்டு மாதம் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
நிகழ்ச்சியை மாவட்ட நூலக ஆணைக்குழு கண்காணிப்பாளர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். முடிவில் நூலகர் கணேசன் நன்றி கூறினார்.