ரத்ததானம் செய்து பிறர் உயிரை காப்பாற்றுங்கள் உதவி கலெக்டர் மெகராஜ் பேச்சு
ரத்ததானம் செய்து பிறர் உயிரை காப்பாற்றுங்கள் என்று ரத்ததானம் செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் பேசினார்.;
காட்பாடி,
செஞ்சிலுவை சங்க காட்பாடி கிளை சார்பில் உலக ரத்ததானம் செய்தோர் தின விழாவை முன்னிட்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சரளா, ஜெயின் பள்ளி செயலாளர் ருக்ஜி ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சிலுவை சங்க காட்பாடி கிளை செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்றார்.
விழாவில் வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அதிகமுறை ரத்ததானம் செய்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துசிலுப்பன், சிவ கலைவாணன் உள்பட 15 பேருக்கு விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ரத்ததானம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இது உள்ளது. அனைவரும் ரத்ததானம் செய்து பிறர் உயிரை காப்பாற்றுங்கள். நீங்கள் கொடுக்கும் ரத்தம் யாருக்கு செலுத்தப்படுகிறது என்பது தெரியாது. பிறருக்கு தெரியாமல் செய்வதுதான் உதவி. உதவி செய்வது பெருந்தன்மை கிடையாது. அது நமது அடிப்படை கடமை.
உதவி செய்ய மறுப்பது கடமையை மீறுவது போன்றதாகும். நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்து வாழவேண்டும். பிறருக்கு உதவி செய்பவன் மனிதன் என்றார் திருவள்ளுவர். அவர் கூற்றுப்படி மற்றவர்களுக்கு நாம் உதவி செய்து வாழவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து ‘ரத்தம் கொடுப்போம் உயிரை காப்போம்’ என்ற ஸ்டிக்கரை வெளியிட்டார். விழாவில் வக்கீல் விஜயராகவலு, டாக்டர் தீனபந்து, தொழிலதிபர் காந்திலால், காட்பாடி தாசில்தார் சுந்தர், செஞ்சிலுவை சங்க செயற்குழு உறுப்பினர் ரமேஷ்குமார் ஜெயின், காட்பாடி கிளை பொருளாளர் பழனி, இணை செயலாளர் விஜயகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணைத்தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.