கோவில்பட்டி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் சாவு
கோவில்பட்டி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தண்டவாளத்தில் ஆண் பிணம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கும், குமாரபுரத்துக்கும் இடையே ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார், தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் பெருமாள், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
அவரது முகத்தில் ரத்தக்காயங்களாக இருந்தது. அவர் சந்தன நிறத்தில் சட்டையும், நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்து இருந்தார். அவரது சட்டைப்பையை சோதனை செய்தபோது, அதில் வாக்காளர் அடையாள அட்டையும், ரெயில் டிக்கெட்டும் இருந்தது தெரியவந்தது. அதனை எடுத்து பார்த்தபோது, அவர் கேரள மாநிலம் வட்டக்குளம் அருகே உள்ள சுகாபுரத்தை சேர்ந்த கங்காதரன் (வயது 72) என்பதும், சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு டிக்கெட் எடுத்து இருந்ததும், பொதுப்பெட்டியில் பயணித்ததும் தெரியவந்தது.
தவறி விழுந்து சாவு
நேற்று முன்தினம் இரவு தூக்க கலக்கத்தில் அவர் ரெயில் பெட்டியில் படிக்கட்டில் வந்து நின்றிருக்கலாம், அப்போது அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.