கொடைக்கானல் நட்சத்திர ஏரியை பாதுகாக்க குழு - கலெக்டர் அறிவிப்பு
கொடைக்கானல் நட்சத்திர ஏரியை பாதுகாக்க குழு ஏற்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் டி.ஜி.வினய் கூறியுள்ளார்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் உள்ள கழிவுகளை அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் முருகேசன், முன்னாள் நகரசபை தலைவர் ஸ்ரீதர், போட் கிளப் கவுரவ தலைவர் பவானி சங்கர், பள்ளி தாளாளர்கள் சதீஷ். ரோகன் சாம்பாபு மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த மினுஅவாரி, மணி வீரா, ரவிகுமார் கால்டன் ஓட்டல் பொதுமேலாளர் ராமன் ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பாம்பார்சோழா பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இதை உடனடியாக அகற்ற வேண்டும், ஏரிக்கு நீர் வரும் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுவிட்டன. ஏரியை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து வரும் கழிவுநீரினை தடுக்க வேண்டும். ஏரி நீரில் பாதரசம் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும். நகராட்சி பகுதியில் சாலை அமைக்கும்போது தரமான பாலங்களை உருவாக்கி மழைநீர் வருவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும். ஏரியில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட தாவரங்களை அகற்ற வேண்டும். ஏரி மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் நகராட்சிக்கு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் கூறப்பட்டன.
பின்னர் இதுகுறித்து கலெக்டர் பேசுகையில், கடந்த 2009-ம் ஆண்டு நட்சத்திர ஏரி நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் இயக்கப்படும் படகுகளுக்கு கட்டணம் வசூல் செய்வது, படகு இயக் கும் உரிமம், அதனை பயிற்சி பெற்றவர்கள் மற்றும் படித்தவர்கள் மட்டுமே படகை இயக் குவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
ஏரியில் படர்ந்துள்ள களைச்செடிகள், குப்பைகள், கழிவுகளை அகற்றுவது குறித்தும், நீர்வரும் வழிகளை சுத்தம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஏரித் தண்ணீரில் பாதரச கலப்பு அதிகமில்லை என்று நிபுணர்கள் குழு கூறியுள்ளது. இது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு, அடுத்து வரும் கூட்டத்திற்குள் ஏரியை பாதுகாப்பது குறித்து ஆலோசனை கூறுவதற்காக ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.