சின்னசேலம் அருகே, குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சின்னசேலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
சின்னசேலம்,
சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டியம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுக்குழாய் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறு வறண்டது. இதனால் இப்பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தொட்டியம் காலனி பகுதி மக்கள் நேற்று காலை 7.30 மணிக்கு கச்சிராயப்பாளையம்- கனியாமூர் சாலைக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேல்முருகன், வீராங்கன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் கடந்த 3 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் விளை நிலங்களுக்கு அலைந்து திரிந்து தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே தினசரி முறையாக குடிநீர் வழங்க வேண்டும்.
மேலும் ஊராட்சி செயலாளர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், உடனே புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும், விசாரணை நடத்தி ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் காலை 9.30 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கச்சிராயப்பாளையம்- கனியாமூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.