தமிழகத்தில் மும்மொழி கல்வித்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் - இந்து அமைப்பினர் கலெக்டரிடம் மனு
தமிழகத்தில் மும்மொழி கல்வித்திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்று இந்துமக்கள் கட்சியினர் (தமிழகம்) கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 7-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மற்றும் 4 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் எம்.பிக்கள் யாரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எம்.பி.க்கள் இல்லாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு எம்.பி.க்களுக்கு அழைப்பும் இல்லை. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவைகள் 5 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவையாகும். இதில் சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், அ.ராசா, சண்முக சுந்தரம், கணேச மூர்த்தி் ஆகிய 5 எம்.பி.க்கள் மக்கள் பிரதிநிதியாக உள்ளனர்.
இவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்து கூறுவதற்கும், தீர்வு காண்பதற்கும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டங்கள் என்பது முக்கியமானதாகும். எனவே ஆய்வு கூட்டங்களுக்கு எம்.பி.க்களை அழைக்க வேண்டும்.
கடந்த 7-ந் தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு 5 எம்.பி.க்களை ஏன் அழைக்கவில்லை? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதி பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி 51-வது வார்டுக்கு பெரிச்சிபாளையம், முனிசிபல் லே-அவுட், தங்கா லே-அவுட், திரு.வி.க.நகர், கோபால்நகர், அன்னமார்காலனி உள்ளிட்ட வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை.
இதன் காரணமாக தற்போது பெய்த மழையின் காரணமாக மழைநீருடன், கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. பல்வேறு குற்றச்செயல்கள் நடந்து வருகிறது. எனவே 51-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும். முறிந்து விழும் நிலையில் உள்ள மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இந்து மக்கள் கட்சியினர் (தமிழகம் ) ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் இ்ந்தி மொழி வெறுப்புணர்வு உள்ளவர்களின் அரசியல் ஆதிக்கம் காரணமாக இருமொழி கல்விக்கொள்கை நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசின் கல்வி நிலையங்களில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் விரும்பினாலும் இந்தி படிக்க முடியாத நிலை உள்ளது. இந்தி படித்தால் தமிழ் அழிந்துவிடும் என்ற மூட நம்பிக்கையை பரப்பி வருகின்றனர்.
இந்தி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வித்துறை கற்க தடை செய்கிறது. தமிழகத்தில் மும்மொழி கல்வித்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்பத்தாரும், தி.மு.க. உயர்மட்ட தலைவர்களின் குடும்பத்தாரும் இந்தி மொழியை படித்து கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னேறியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நல்லூர் நுகர்வோர் நலமன்றத்தினர் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருப்பூர் மாவட்ட போக்குவரத்து கமிட்டி அமைக்கப்பட்டு அதில் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது. விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக, நஞ்சப்பா மற்றும் ஜெய்வாபாய் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அனைவரையும் இலவச பயண சீட்டு வசதி மூலமாக காலையில் இறக்கி விட்டு மாலையில் அழைத்து வர கலெக்டரின் ஒப்புதலின் பேரில் அன்றைக்கு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் தற்போது பள்ளிகள் திறந்தும் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் காலையிலும், மாலையிலும் அரசு பஸ்களை நஞ்சப்பா, ஜெய்வாபாய் பள்ளி அருகில் நிறுத்தி மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கு ஏற்றி மற்றும் இறக்கி விட ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் அரசு மரம் வளர்த்தல் திட்டத்தை அமல்படுத்தினால் புவி வெப்பமடையாமல் வறட்சியற்ற மாநிலமாக இருக்கும்.
ஆனால் நகர்புறங்களில் மட்டும் தான் மரங்கள் வளர்க்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஓரம், மாநில சாலைகள், கிராமப்புற சாலைகள், கிராம பகுதிகளில் ஏரி, குளம், குட்டை, புறம்போக்கு நிலங்களில் மரங்களை நடும் போது மாநிலம் முழுவதும் பரவலாக மரங்கள் இருக்கும். எனவே மரம் நடுதல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.