சென்னிமலையில் ருசிகரம், கூட்டுறவு சங்க தேர்தலில் தோற்றவருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய அதிகாரி
சென்னிமலை கூட்டுறவு சங்க தேர்தலில் தோற்றவருக்கு அதிகாரி, வெற்றி சான்றிதழ் வழங்கிய ருசிகர சம்பவம் நடந்து உள்ளது. இந்த ருசிகர சம்பம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செம்மலர் நெசவாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 137 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கத்துக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் 2 பெண்கள் உள்பட மொத்தம் 7 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட 7 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் இருந்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 2 பெண்கள் உள்பட 3 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். மீதம் உள்ள 4 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த 8-ந் தேதி தேர்தல் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடந்தது. 4 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு சுப்பிரமணி, ஈஸ்வரமூர்த்தி, சாமியப்பன், பொன்.ரமணி மற்றும் சவுந்திரராஜன் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 137 உறுப்பினர்களில் 125 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்கு எண்ணிக்கை தேர்தல் அதிகாரியான சங்கத்தின் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் செல்வம் முன்னிலையில் நேற்று நடந்தது.
இதில் சுப்பிரமணி, ஈஸ்வரமூர்த்தி, பொன்.ரமணி, சவுந்திரராஜன் ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். 22 வாக்குகள் பெற்ற சாமியப்பன் தோல்வி அடைந்தார்.
இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களின் பெயர் சங்க அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
இதற்கிடையே நிர்வாகக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சாமியப்பனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ‘நாம் தான் தோற்றுவிட்டோமே’ என சர்வ சாதாரணமாக நினைத்துக்கொண்டு அந்த சான்றிதழை அவர் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் சான்றிதழை நிதானமாக படித்து பார்த்தார். அப்போது அதில் நிா்வாகக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம் தேர்தல் அதிகாரியின் கையெழுத்துடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தார்.
உடனே அவர் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்ட நோட்டீசில் நிர்வாகக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னுடைய பெயர் ஏன் இல்லை? என தே்ாதல் அதிகாரியிடம் கேட்டார்.
அப்போதுதான் அதிகாரிக்கு தோற்றவருக்கு வெற்றி பெற்ற சான்றிதழ் வழங்கப்பட்டது ெதரியவந்தது. உடனே தேர்தல் அதிகாரி, நான் தவறுதலாக சான்றிதழ் வழங்கிவிட்டேன். எனவே அந்த சான்றிதழை என்னிடம் வழங்கி விடுங்கள் என்றார். இதை ஏற்க மறுத்த சாமியப்பன், நான் தேர்தலில் நின்று நிர்வாகக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என்னிடம் உள்ளது. என்னை நிர்வாகக்குழு உறுப்பினராக ஏற்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன் என கூறிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் 3 பேர் சாமியப்பன் வீட்டுக்கு சென்று சமசரம் செய்து உள்ளனர். ஆனால் அவர்களுடைய சமரசத்தை ஏற்க சாமியப்பன் மறுத்துவிட்டார். இதனால் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஏமாற்றத்துடன் மீண்டும் சங்க அலுவலகத்துக்கு திரும்பி வந்தனர்.
ஒரு சினிமா படத்தில் வடிவேலு நான் கிணறு வெட்டினேன். ஆனால் அந்த கிணற்றை காணவில்லை. அதை யாரோ திருடி சென்றுவிட்டனர். கிணறு வெட்டியதற்கான ரசீது என்னிடம் உள்ளது. இதை வைத்து நான் சுப்ரீம் கோர்ட்டு வரை செல்வேன் என கூறுவார். அதேபோல் தான் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி வழங்கிய சான்றிதழ் என்னிடம் உள்ளது. எனவே என்னை நிர்வாகக்குழு உறுப்பினராக ஏற்காவிட்டால் நீதிமன்றம் செல்வேன் எனக்கூறிய சாமியப்பனால் சென்னிமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.