கள்ளக்குறிச்சி அருகே, பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பொற்படாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 41). இவரது மகள் நாகேஸ்வரி(16). இவர் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நாகேஸ்வரி வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் பெற்றோர் வெளியே சென்றதும், வீட்டில் தனியாக இருந்த நாகேஸ்வரி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை நாகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாமிதுரை கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஸ்வரி உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.