கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-10 23:15 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். புரட்சிகர இளைஞர் கழகத்தினர் மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜ் தலைமையில், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது. ஏற்கனவே அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 அணுஉலைகளையும் உடனே இழுத்து மூடவேண்டும் என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது. இதனால் கடல்வாழ் உயிர்களுக்கு பெரும் அழிவு ஏற்படும். கடல் நீர் எல்லாம் கதிர்வீச்சாகும். எனவே அங்கு கழிவு மையம் அமைக்க எந்த கருத்து கேட்பு கூட்டமும் தேவையில்லை. மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை உடனே கைவிடவேண்டும். அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 அணுஉலைகளையும் உடனே மூடவேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதேபோல் மீனவ மக்கள் கட்சியினர் தலைவர் அலங்காரபரதர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது என்று கூறி மனு கொடுத்தனர்.

தமிழர் தேசிய கொற்றத்தினர் நிறுவன தலைவர் வியனரசு தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கக்கூடாது என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், கோரிக்கையை வலியுறுத்தியும் கோஷங்கள் போட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு புதுக்காலனி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளையும் மக்கள் தொகை அடிப்படையில் புதிய வார்டுகள் அமைக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் பகுதி தலைவர் அப்துல்காதர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

மணிமுத்தாறு அணையில் இருந்து ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், வைராவிகுளம், பொட்டல் ஆகிய பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு 40 அடி கால்வாயில் வரக்கூடிய தண்ணீரை திறந்துவிடவேண்டும் என்று கூறி அந்த பகுதி விவசாயிகள் அயன்சிங்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பூதப்பாண்டி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

சங்கரன்கோவில் தாலுகா பனையூர் பஞ்சாயத்து தலைவர் பதவியை பொதுப்பிரிவினருக்கு வழங்கவேண்டும் என்று கூறி அந்த ஊர்மக்கள் மனு கொடுத்தனர். கடையம் அருகே உள்ள பண்டாரகுளத்தில் செயல்படும் கல்குவாரியால் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு உள்ளது. எனவே அதை உடனே மூடவேண்டும் என்று கூறி அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

வீரகேரளம்புதூர் அருகே உள்ள பலபத்திரராமபுரம் கங்கணாங்கிணறு ஊரை சேர்ந்த சுப்புதாய், அவருடைய தாய் ஆறுமுகத்தம்மாள் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், வயதான நிலையில் உள்ள எங்களால் தெரு நல்லியில் தண்ணீர் எடுக்கமுடியவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு உடனே குடிநீர் நல்லி அமைத்துத்தரவேண்டும். இல்லையெனில் எங்களை கருணை கொலை செய்ய உத்தரவிடவேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்