ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 1,400 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம்
ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 1,400 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் முத்துச்சரம் திட்டத்தின் கீழ் தாமிர சுரபி என்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன தலைமை செயல் அலுவலர் பங்கஜ்குமார் கூறுகையில், “இந்த திட்டத்தின் மூலம் ஆலையைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை தலா 36 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரையிலும் 12 கிராமங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் சுமார் 1,400 குடும்பங்கள் பயன்பெறுகின்றன. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெறுவது எங்களது முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாகும். குடிநீர் வழங்கல் திட்டத்தின் தொடக்கநிலை செலவானது ரூ.50 லட்சம் ஆகும். 5 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கலை விரிவாக்க திட்டமிட்டு இருப்பதால் செலவு அதிகரிக்கக்கூடும்“ என்றார்.
இதேபோல் பங்கஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி வேதாந்தா லிமிடெட்-ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் தனியார் கடல்நீர் சுத்திகரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஆலை உபயோகத்துக்காக உப்புத்தன்மை அகற்றப்பட்ட தண்ணீரை பெற்று பயன்படுத்தி வந்தது. இதனால் ஆலையின் தேவையில் 70 சதவீதம் கடல்நீர் சுத்திகரித்து பயன்படுத்தப்பட்டு வந்தது. அதே நேரத்தில் தனியார் சுத்திகரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தனியார் கடல்நீர் சுத்திகரிப்பு நிறுவனம் தினமும் 10 லட்சம் லிட்டர் கடல்நீரை உப்பு நீக்கி குடிநீராக மாற்றும் ஆலையை அமைப்பதற்கான அனுமதி பெற்று உள்ளது. அந்த ஆலையை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படும்போது, 100 சதவீதம் கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிரபரணி ஆற்று தண்ணீர் முழுமையாக பயன்படுத்தப்படாது” என்று கூறப்பட்டு உள்ளது.