எட்டயபுரத்தில் மனைவியை கொன்ற தொழிலாளி கைது பரபரப்பு வாக்குமூலம்

எட்டயபுரத்தில் மனைவியை வெட்டிக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.;

Update: 2019-06-10 22:30 GMT
எட்டயபுரம், 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிற்பட்டி தெற்கு ஆறுமுக முதலியார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 35). இவர் கோவில்பட்டியில் உள்ள கோழி இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி முனீசுவரி (32). இவர்களுக்கு முகேஷ் (11) என்ற மகனும், மஞ்சு (9) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கருப்பசாமி அரிவாளால் தன்னுடைய மனைவியை வெட்டிக் கொலை செய்தார். பின்னர் கருப்பசாமி தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கருப்பசாமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் கருப்பசாமி கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர். கைதான கருப்பசாமி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் முன்பு கேரள மாநிலத்தில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்தேன். பின்னர் கடந்த சில மாதங்களாக கோவில்பட்டியில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் நான் என்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தேன். இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலையில் எங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நான் என்னுடைய மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன். பின்னர் நான் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் சென்று சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்