தூத்துக்குடி துறைமுகத்தில், மின்னணு முத்திரையிடப்பட்ட சரக்கு பெட்டகங்களை நேரடியாக அனுமதிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்
தூத்துக்குடி துறைமுகத்தில் மின்னணு முத்திரையிடப்பட்ட சரக்கு பெட்டகங்களை நேரடியாக அனுமதிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் இணைந்து, வ.உ.சி. துறைமுகத்துக்குள், மின்னணு முத்திரையிடப்பட்ட சரக்கு பெட்டகங்களை நேரடியாக அனுமதிக்கும் சேவையை தொடங்குகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதில் வ.உ.சி. துறைமுக தலைவர் ராமச்சந்திரன், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவன தலைமை நிர்வாகி அருண்குமார் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக துணைத்தலைவர் வையாபுரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம் துறைமுகத்துக்கு சொந்தமான மீன்வளக்கல்லூரிக்கு அருகில் உள்ள லாரிகள் நிறுத்தும் முனையத்தில் சரக்கு பெட்டகங்களை நேரடியாக அனுமதிக்கும் சேவையை 30 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் செயல்படுத்த உள்ளது. தற்போது மின்னணு முத்திரையிடப்பட்ட சரக்கு பெட்டகங்கள் அனைத்தும் துறைமுகத்தின் அருகே உள்ள 15 சரக்கு பெட்டக நிலையங்கள் மற்றும் சர்வதேச சரக்கு பெட்டக தளங்களில் கையாளப்பட்டு வருகிறது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் தொழிற்சாலைகளில் இருந்து மின்னணு முத்திரையிடப்பட்ட சரக்கு பெட்டகங்கள் மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்துக்கு வரும்போது, அங்கு சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மற்றும் துறைமுக அனுமதி சீட்டு உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்படுகிறது. இந்த சேவை மூலம் சரக்கு பெட்டகங்கள் விரைவாக துறைமுகத்தில் உள்ள சரக்கு பெட்டக முனையத்துக்கு எடுத்து செல்ல முடியும். ஏற்றுமதிக்கான செலவும் குறையும்.
இதுகுறித்து வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் கூறும்போது, “சரக்கு பெட்டகங்கள் நேரடியாக அனுமதிக்கப்படும் சேவையானது ஏற்றுமதியாளர்களுக்கு சரக்குகளை கையாளும் அனைத்து தளவாடங்களின் சேவையில் நேரத்தை குறைக்கிறது. சரக்கு பெட்டகங்கள் வெவ்வேறு முனையங்களில் தங்கும் நேரத்தையும் குறைக்கும். மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சரக்குபெட்டகங்களை கையாளும் திறனும், அனுபவமும் இந்த சேவையை குறைந்த செலவில் சிறப்பாக செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
இதுகுறித்து மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவன தலைமை நிர்வாகி அருண்குமார் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்துக்கு கீழ் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இந்த சேவையை சிறந்த முறையில் செயல்படுத்தும்.
இதன்மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் சரக்கு பெட்டகங்களின் அளவு அதிகரிக்க உதவும் என்றார்.