மும்முனை மின்சாரம் கேட்டு கருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
கருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் மும்முனை மின் இணைப்பு வழங்கக்கோரி நல்லப்பன் திட்டு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கருப்பூர்,
கருப்பூர் மின்வாரிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட, நல்லப்பன் திட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் கரும்பு, குச்சி, வாழை, நிலக்கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளில் விவசாயத்தோடு தொடர்புடைய பாக்கு மட்டை, கயிறு, விசைத்தறி போன்ற சிறு,குறு தொழில்களும் செய்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இந்த பகுதிக்கு குறைந்த மின்னழுத்தத்துடன் கூடிய மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள், சிறு, குறு தொழில் புரிவோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக வீடுகளில் மிக்சி, மின்விசிறி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் பெண்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே இந்த பகுதிக்கு மும்முனை மின்சார இணைப்பு வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் நேற்று காலையில் கருப்பூர் மின்வாரிய அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் அலுவலக வளாகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக கூறி அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் விவசாயிகள் சங்க தலைவர் நடராஜன், நிர்வாகிகள் கருப்பண்ணன், கோவிந்தராஜ், மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதனிடையே போராட்டம் நடத்தியவர்களிடம், மின்வாரிய உதவி பொறியாளர் சுரேஷ், உதவி ஆய்வாளர்கள் அங்கப்பன், மணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நல்லப்பன் திட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மும்முனை மின்சார இணைப்பு இன்னும் 2,3 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.