சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையி்ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட ராமநாதபுரம், நாமமலை, புதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் 800-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதானது. இதனால் இந்த பகுதிகளுக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வந்தனர்.
இந்தநிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் மண்டல உதவி ஆணையாளர் கவிதா மற்றும் அம்மாபேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் இன்னும் சில நாட்களில் கோவையில் இருந்து புதுமோட்டார் கொண்டுவரப்பட்டு கிணற்றில் பொருத்தி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முன்னதாக இதுகுறித்து பெண்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றின் மோட்டார் பழுதுதானதால் குடிநீருக்காக பல்வேறு இடங்களில் அலைந்து வருகிறோம். மேலும் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கின்ற அவல நிலையும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே புதுமோட்டார் வழங்கியும், பொதுக் குழாய் அமைத்தும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.