கிராம மக்களிடம் தவறான தகவலை கூறி கையெழுத்து பெற்ற பீட்டா அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க மனு
கிராமமக்களிடம் தவறான தகவலை கூறி கையெழுத்து பெற்ற பீட்டா அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீரவிளையாட்டு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.;
சிவகங்கை,
தமிழ்நாடு வீரவிளையாட்டு கூட்டமைப்பு நிறுவனர் அம்பலத்தரசு, ஒருங்கிணைப்பாளர் ராகேஷ், தமிழ்நாடு வடமாடுநலச்சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:– தமிழர்களின் கலாசாரத்தின் அடையாளமாகவும், மத உணர்வுகளை வெளிப்படுத்தும் திருவிழாவாகவும் நடைபெறுவது தான் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு ஆகியவை. இந்த கலாசார நிகழ்வானது தமிழக அரசால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு உட்பட்டு அரசு அதிகாரிகள் முன்னிலையில் உச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பீட்டா என்ற விலங்குகள் நல அமைப்பு இதை தடை செய்யும் நோக்கில், பொய்யான ஆதாரங்களை தயார் செய்து போராடி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் எஸ்.வி.மங்களம் என்ற ஊரில் உள்ள விவசாயிகளிடம் கடன் உதவி பெற்று தருவதாக கூறினர்.
மேலும் அவர்களிடம் ஜல்லிக்கட்டை தடைசெய்யுமாறு கூறும் வாசகங்களை நிரப்பி, கிராம மக்களிடம் தவறான தகவலை கூறி அவர்களை ஏமாற்றி கையொப்பம் வாங்கி சென்றுள்ளனர். இது தொடர்பாக தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.