சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்; குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை

சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் குடிநீர் வழங்க கள ஆய்வில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2019-06-10 23:15 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பகுதியில் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான வார்டு எண் 7,8,9 ஆகியவை உள்ளன. இந்த பகுதி சிங்கம்புணரி பேரூராட்சி நகர் தேத்தாங்காடு, அண்ணாநகர் எல்லைக்குள் அமைந்திருப்பதால், தேவையான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கிராம ஊராட்சியின் சார்பில் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் காவிரி கூட்டுக் குடிநீர் தங்கள் பகுதிக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக இந்த பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை.

அதைத்தொடர்ந்து இந்த பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வழங்கக்கோரி புகார் செய்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலிக்குடங்களுடன் சுமார் 100–க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சுந்தரமகாலிங்கத்திடம் இதுகுறித்து முறையிட்டனர். தகவலறிந்து வந்த சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் முற்றுகை செய்தவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று கூறினர்.

மேலும் தாசில்தார், வருவாய் அதிகாரி சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக தேத்தாங்காடு பகுதிக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை செய்தனர்.

மேலும் தற்காலிக நடவடிக்கையாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கூடுதலான ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு, முறையாக குடிநீர் வழங்க வசதி செய்து தரப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்