பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலைமறியல்; அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம்

பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2019-06-10 23:00 GMT

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சியை சேர்ந்த மோசூர் கிராமத்தில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தங்களது பிரச்சினை குறித்து அவர்கள் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். அப்போது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் அம்மையார்குப்பம் ஆர்.கே.பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து சொன்னால் கலைந்து செல்வதாக கூறினர். ஆனால் 2 மணி நேரம் சாலைமறியல் செய்தும் ஒன்றிய அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வேறு வழியில்லாமல் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்