பர்கூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஆண் குழந்தை பலி
பர்கூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஜெகதேவி பக்கமுள்ளது வாத்தியார்கொட்டாய். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இன்பவள்ளி. இந்த தம்பதிக்கு பவன்தேஜா என்ற 1½ வயது ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பவன்தேஜா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி விழுந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி பவன்தேஜா பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்த நிலையில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நீண்ட நேரமாக காணாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் குழந்தையை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை பிணமாக மிதந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இது குறித்து பர்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி 1½ வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.