கல்வி நிறுவனங்களில் பங்குதாரர்களாக செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தனியார் கல்வி நிறுவனங்களில் பங்குதாரர்களாக செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க நிர்வாகிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகிகள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் அரசாணையின்படி 31.5.2019-க்கு பிறகு அங்கீகாரம் இல்லாமலும் 25 சதவீத இலவச கட்டாய கல்வி மாணவர் சேர்க்கை இல்லாமலும் ஒரு சில தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சில பள்ளிகள் 22.5.2019 அன்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கம் வெளியிட்ட அங்கீகார பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த பள்ளிகளில் அங்கீகாரம் இல்லாமல் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசின் ஆணைப்படி மாவட்ட கலெக்டர் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் விவரங்களை வெளியிட வேண்டும். அத்தகைய பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்தி அந்த பள்ளிகள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களில் சிலர் தனியார் கல்வி நிறுவனங்களில் பங்குதாரர்களாக உள்ளனர். இத்தகைய ஆசிரியர்கள் மீதும் தகுந்த ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சில தனியார் பள்ளிகளில் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் பங்குதாரர்களாகவும், அவர்களுடைய உறவினர்களின் பெயர்களில் பங்குகளை வாங்கியும் நிர்வகித்து வருகிறார்கள். இவர்கள் மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்துகிறார்கள். இதனால் அரசு பள்ளிகளில் இவர்கள் செய்யும் பணியின் தரம் குறைவதோடு மாணவர்களின் கல்வித்தரமும் குறைந்து வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்குதாரர்களாக உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கடந்த சில ஆண்டுகளாக அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெறுகிறார்கள்.
அரசு பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டு தனியார் பள்ளிகளை நடத்துபவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்வு மையங்களில் விதிகளுக்கு புறம்பாக தாங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு சில உதவிகளை செய்து அதிக மதிப்பெண்கள் பெற துணையாக இருக்கிறார்கள். இத்தகைய செயலில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது அரசு பள்ளிகளின் நலன் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.