எருமப்பட்டி அருகே மர்ம சாவில் திடீர் திருப்பம்: மனைவி, குழந்தை கழுத்தை அறுத்துக்கொன்ற டிரைவர்
எருமப்பட்டி அருகே லாரி டிரைவரின் மனைவி, குழந்தை மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 2 பேரும் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கொடூர கொலையை செய்தது தெரியவந்துள்ளது.;
எருமப்பட்டி,
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள மாணிக்கவேலூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25), லாரி டிரைவர். இவர் எருமப்பட்டி அருகே கஸ்தூரிபட்டியை சேர்ந்த கவுரி (20) என்ற பெண்ணை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் புகழ்வின் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் மாணிக்கவேலூர் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். நீண்டநேரம் ஆகியும் அங்கிருந்து வீடு திரும்பாததால் உறவினர்கள் அந்த தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு கவுரியும், புகழ்வினும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். சுரேஷ் வெட்டு காயத்துடன் கிடந்தார்.
உடனே சுரேசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கவுரி மற்றும் புகழ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுரேசும், கவுரியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். தாய், குழந்தை மர்ம சாவில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கவுரியும், சுரேசின் நண்பரும்-லாரி டிரைவருமான ஒருவரும் சகஜமாக பேசி பழகி வந்துள்ளனர். இதனால் மனைவி மீது சந்தேகம் கொண்ட சுரேஷ் தனது மனைவியை குழந்தையுடன் அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு மனைவி, குழந்தை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ் மருத்துவமனையில் இருந்து திரும்பியவுடன் விசாரணை நடத்தினால் தான் முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.