சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து; 2 பேர் உடல் கருகினர்

சிவகாசி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் தீயில் கருகி படுகாயம் அடைந்தார்கள்.

Update: 2019-06-09 22:30 GMT

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பேரநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 55). இவர் அங்கு பட்டாசுக்கான காகித குழாய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்கான குடோனை கீழகோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த கவியரசு(45) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

குடோனை வாடகைக்கு எடுத்த கவியரசு அதனை விரிவுபடுத்தி அங்கு அனுமதியின்றி திருட்டுத்தனமாக பேன்சி ரக பட்டாசு தயாரித்து வந்துள்ளார்.

நேற்று காலை விஸ்வநத்தம் பாரதிநகர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சோலைராஜ்(28) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கணேசன்(47) ஆகியோர் மணிமருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கலவை தயாரித்த 2 தொழிலாளர்களும் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். மேலும் அங்கு தீ பரவியது.

படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வெம்பக்கோட்டை போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் சுப்புராஜ் மற்றும் கவியரசு ஆகியோரை கைது செய்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 2 தொழிலாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெம்பக்கோட்டை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பது தொடருகிறது. கடந்த மாதம் தாயில்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்ததோடு அந்த பகுதியிலுள்ள 10–க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

பட்டாசு ஆலை நடத்த அரசு பல விதிமுறைகளை விதித்துள்ளது. அதனை பின்பற்றி ஏராளமான ஆலைகள் நடந்து வரும் நிலையில், திருட்டுத்தனமாக ஆலை நடத்துவது பெரும் லாபம் தருவதாக உள்ளது. இதனால் சிலர் இதைப்போன்று குடோன்களை வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரிக்கின்றனர்.

இங்கு வேலைக்கு வருவோருக்கு முறைப்படி இயங்கும் ஆலைகளில் வழங்கும் சம்பளத்தை விட 2 மடங்கு கூலி தருவதால் தொழிலாளர்கள் அதற்கு ஆசைப்பட்டு இங்கு வருகின்றனர். மேலும் சலுகைகள் வழங்கி தொழிலாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்