குண்டும், குழியுமாக மாறியும் 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலை

தேவர்சோலையில் குண்டும், குழியுமாக மாறியும் 15 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.

Update: 2019-06-09 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் தாலுகா தேவர்சோலையில் பேரூராட்சி அலுவலகம், பஸ் நிலையம் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இதுதவிர ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருந்து வருகின்றனர். தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் பாடந்தொரை, 9-வது மைல் உள்பட ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இதனால் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் தேவர்சோலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தேவர்சோலையில் இருந்து தேவன்-1 பகுதிக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை செல்கிறது. இந்த சாலையை கொட்டமேடு, நெல்லிக்குன்னு, பாலம்வயல் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 2 வேளை மட்டுமே அரசு பஸ் கடந்த 40 ஆண்டுகளாக இயக்கப்படுகிறது. இதனிடையே தேவர்சோலை- தேவன் 1 இடையே உள்ள தார் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் தனியார் வாகனங்கள் சரிவர இயக்கப்படுவது இல்லை. அரசு பஸ்சை மட்டுமே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சாலை மிகவும் மோசமாக இருப்பதால் அரசு பஸ்சும் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. எனவே சாலையை புதுப்பிக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் நோயாளிகள், கர்ப்பிணிகளை அவசர காலத்தில் வாகனங்களில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இதுகுறித்து தேவர்சோலை பேரூராட்சி பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த 15 ஆண்டுகளாக சாலை பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அரசு பஸ் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. எனவே பஸ்சை நிறுத்த போக்குவரத்து கழக அதிகாரிகளும் திட்டமிட்டு வருகின்றனர். சாலை சரி இல்லை என காரணம் கூறி எந்த நேரத்திலும் பஸ் இயக்குவது நிறுத்தப்படலாம். மேலும் ஆட்டோ, ஜீப்புகளும் தேவர்சோலை- தேவன் 1 சாலையில் இயக்க முன்வருவது இல்லை. இதனால் பெரும் அவதி அடைந்து வருகிறோம். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்