தரமற்ற சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தரமற்ற சாலை அமைக்கப்பட்டதை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.;

Update: 2019-06-09 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முன்தினம் கொசஸஸ்தலை ஆறு மற்றும் கனிமவள பாதுகாப்பு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் வாசுதேவன், செயலாளர் முருகன், பொருளாளர் சீனிவாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் டில்லி மற்றும் மெய்யூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

மெய்யூர் ஊராட்சியில் அடங்கிய வெம்பேடு கிராமத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2018–19–ன் கீழ் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தார் சாலை அமைக்கும்பணி தொடங்கப்பட்டது.

இந்த பணி அவசர அவசரமாக தேர்தல் காலங்களில் முடிக்கப்பட்டது. அந்த சாலை அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஜல்லியை சாலையோரமாக வைத்துவிட்டு தேர்தல் நேரத்தில் இரவோடு இரவாக ஒப்பந்ததாரரே எடுத்து சென்று விட்டார். பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலமாக கிளறி அதில் இருந்த ஜல்லியை பயன்படுத்தியே தரமற்ற தார்சாலையை அமைத்துள்ளனர். இந்த திட்டத்திற்காக அரசு ஒதுக்கியது ரூ.55 லட்சத்து 66 ஆயிரம் ஆகும். 2.4 கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்ட இந்த சாலையானது 2 மாத காலத்திற்குள்ளேயே பெயர்ந்து மேடு பள்ளங்களாக காட்சியளிக்கிறது. அதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே தரமற்றதாக போடப்பட்ட இந்த சாலையை ஆய்வு செய்து மீண்டும் தரமான சாலையாக அமைத்து தரவேண்டும் என்று தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்