அந்தேரி ஜெயின் கோவிலில் ரூ.30 லட்சம் தங்க கிரீடம் திருடியவர் கைது

அந்தேரி ஜெயின் கோவிலில் ரூ.30 லட்சம் தங்க கிரீடத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-09 22:15 GMT
மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி சாமி சிலைக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடம் திருட்டு போனது.

இதுபற்றி கோவில் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், ஜெயின் மதகுரு போல கோவிலுக்குள் வந்த ஒருவர் சாமி சிலையில் இருந்த கிரீடத்தை திருடி சென்றிருந்த காட்சி பதிவாகி இருந்தது.

இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியில், பதிவாகியிருந்த திருட்டு ஆசாமியின் உருவத்தை வைத்து அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், அந்த ஆசாமி புலேஸ்வர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

விசாரணையில், அவரது பெயர் நரேஷ் என்பது தெரியவந்தது. இவர் மதகுரு போல சென்று பல்வேறு ஜெயின் கோவில்களில் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்