நடைமுறை கல்வியை சொல்கிறது தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

Update: 2019-06-09 23:30 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் உள்ள ஸ்ரீசத்திய சாய் நிறுவனத்தின் பொன் விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்தியா மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை நீங்கள் படித்திருப்பீர்கள். அது கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டது. அது பல்வேறு பிரச்சினைகள் குறித்து முழு விவரங்கள் அடங்கிய ஆவணம் ஆகும்.

அனைத்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க அந்த ஆவணம் வழி அமைத்துள்ளது. சிறப்பான கல்வி மற்றும் சமபங்கின் தேவையை உணர்த்துகிறது. அந்த வரைவு அறிக்கை, தேசிய தேவை, நமது பண்பாடு, உலக அளவில் சிறப்பான மாணவர்களை உருவாக்க வேண்டிய தேவை ஆகியவற்றில் சமநிலையை உண்டாக்கி இருக்கிறது.

இந்த வரைவு அறிக்கை நடைமுறை கல்வி கொள்கையை சொல்கிறது. இதில் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பன்மொழி உலகில் பிற மொழிகளில் உள்ள அறிவுத்திறமையை முன்னெடுப்பது குறித்தும் இடம் பெற்றுள்ளது. இந்தியா இன்று இளம் இந்தியாவாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 சதவீதம் பேரும், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 65 சதவீதம் பேரும் உள்ளனர்.

இது இதுவரை கிடைக்கப்பெறாத வாய்ப்பு ஆகும். இது கல்வித்துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. 21-வது நூற்றாண்டுக்கு தேவையான திறன், அறிவாற்றல், மனநிலையை ஏற்படுத்தும் வகையில் நமது கல்வி முறையை சீரமைக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கான அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 74.04 சதவீதமாக உள்ளது. 15 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் கல்வியறிவு 81.1 சதவீதமாக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் மக்கள், வளர்ச்சி பணிகளில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் படிக்க, எழுத, திறனை உருவாக்க, பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி கல்வி முறை, குழந்தைகளுக்கு தோழனாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் உள்ளுணர்வுகளை புரிந்து முழுமையான வளர்ச்சியை உருவாக்க வேண்டும். சிறப்பான ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்க உயர்கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். கல்வி வரைவு கொள்கையில் பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. அந்த பரிந்துரைகள் நாட்டின் கல்வியை முன்னெடுத்து செல்லவும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

நாட்டின் அனைத்து தரப்பினரும், இந்த கல்வி கொள்கையின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய வேண்டும். அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விஷயங்களில் அனைவரும் பங்கேற்று விவாதிக்க வேண்டும். நமது அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு விஷயத்தில் சீர்திருத்தம் செய்வதால், நமது பொருளாதாரம் வலுவானதாகவும், எதையும் தாங்கக்கூடியதாகவும் மாறியுள்ளது. நமது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

மரியாதைக்குரிய நாடுகளில் பட்டியலில் இந்தியா ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நமது ஊக்கத்துடன் கூடிய வளர்ச்சியை மேலும் முடுக்கிவிட வேண்டும். அதன் மீது மிக முக்கியமான கவனத்தை செலுத்த வேண்டும். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும். இந்த பணி நமது அனைவர் மீதும் உள்ளது. இதில் நாம் தோல்வியடைவே கூடாது. நமது ஒட்டுமொத்த கல்வியை சீரமைப்பது குறித்து சிந்திக்க, கற்பனை செய்ய, புதிய விஷயங்களை கண்டுபிடிக்க இது சரியான தருணம்.

இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விமானம் மூலம் பெங்களூரு எச்.எல்.ஏ. விமான நிலையத்தில் வந்து இறங்கிய வெங்கையா நாயுடுவை, கவர்னர் வஜூபாய் வாலா வரவேற்றார்.

மேலும் செய்திகள்