தரமற்ற மிக்சர் விற்பனை: கடை உரிமையாளர், விற்பனையாளருக்கு அபராதம் கோவில்பட்டி கோர்ட்டு உத்தரவு
தரமற்ற மிக்சர் விற்பனை செய்ததாக கடை உரிமையாளர், விற்பனையாளருக்கு அபராதம் விதித்து கோவில்பட்டி கோர்ட்டு உத்தரவிட்டது.;
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரசபை உணவு பாதுகாப்பு அலுவலர் முருகேசன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள சுவீட் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சில கடைகளில் இருந்து மிக்சர் மாதிரிகள் எடுத்து அதன் தரத்தை அறிவதற்காக, தஞ்சையில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு சோதனை செய்ய அனுப்பி வைத்தார். அந்த சோதனை அறிக்கையில் கோவில்பட்டி மெயின் பஜாரில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான கடையில் இருந்து எடுக்கப்பட்ட மிக்சர் தரமற்றது என்று தெரியவந்தது.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் முருகேசன் கோவில்பட்டி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சங்கர், அந்த கடையின் விற்பனையாளர் கணேசன், கடையின் உரிமையாளர் ராஜ்குமார் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் கோர்ட்டு முடியும் வரை கோர்ட்டில் இருக்க வேண்டும் என்றும் நூதன தண்டனை கூறி உத்தரவிட்டார்.