அமைச்சரவைக்கு தெரியாமல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதா? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி

புதுவையில் அமைச்சரவைக்கு தெரியாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா? என அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

Update: 2019-06-08 23:45 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மக்கள் நலனில் அக்கறையின்றி மலிவு விளம்பரத்திற்கு ஆர்வம் காட்டி வருகிறார். நேற்று (நேற்று முன்தினம்) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக மாநிலம் வளர்ச்சி அடையவில்லை, அறிவித்த திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை, வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அடுத்த 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் இதே வாக்குமூலத்தை அளிப்பார்.

முதல்-அமைச்சருக்கு போராட்டம் நடத்த உரிமை உள்ளதாக கூறுகிறார். ஆனால் பாசிக், பாப்ஸ்கோ, ரோடியர் மில் ஊழியர்கள் சம்பளத்திற்காக போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.

மாநிலத்தின் வருவாயை பெருக்க எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பல திட்டங்களை கூறியும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. உதாரணமாக கலால் துறையில் அரசு கார்பரேஷன் அமைத்து 7 தனியார் மதுபான உற்பத்தியாளர்களிடம் மொத்தமாக வாங்கி சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்தால் ஆண்டிற்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கும். அரசு துறைகளில் உரிய கவனம் செலுத்தினால் ஆண்டிற்கு ரூ.750 கோடி வருவாயும், ஆண்டிற்கு ரூ.250 வருவாய் இழப்பையும் தடுக்க முடியும்.

புதுச்சேரியில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்வு செய்யப்பட்டது. இந்த மின் உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மின் உயர்வு அமைச்சரவைக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவா? அப்படி இருந்தால் அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டண உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தாதது ஏன்? இது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டது வரவேற்கத்தக்கது. அரசு ஊழியர்கள் 40 சதவீதம் பேர் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதே கிடையாது. அரசு ஊழியர்கள் 3 நாட்கள் தொடர்ந்து காலதாமதமாக வந்தால் சம்பள விடுப்பில் அரைநாள் கழிக்கலாம். விருப்பு, வெறுப்பின்றி பணிக்கு தாமதமாக வரும் 10 அரசு ஊழியர்கள் மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தால் அனைவரும் திருந்தி சரியான நேரத்திற்கு பணிக்கு வருவார்கள். இதை செய்ய அரசுக்கு திராணி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்