சயான் கோலிவாடாவில் தமிழ் மாணவி தீக்குளித்து தற்கொலை போலீஸ் விசாரணை
சயான் கோலிவாடாவில் தமிழ் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.;
மும்பை,
மும்பை சயான் கோலிவாடா, சர்தார் நகரில் உள்ள ஓம்சக்தி மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் முருகன். கார் டிரைவர். இவரது மகள் சக்தி நந்தினி (வயது17).
மாட்டுங்காவில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் படித்து வந்த மாணவி, 12-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருந்தார்.
தீக்குளித்து தற்கொலை
இந்தநிலையில், நேற்று முன்தினம் மாலை மாணவி வீட்டின் மேல் தளத்தில் தனியாக இருந்தார். அப்போது அவர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி சென்றனர். அவர்கள் மாணவியின் உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக மாணவியை சயான் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி மாணவி சக்தி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
தகவல் அறிந்து சென்ற வடலா டி.டி. போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதை கண்டு பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட தமிழ் மாணவி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.