திருப்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை சாவு; போலீசார் விசாரணை

திருப்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை இறந்தது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-08 23:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆறுகொம்பை வீதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 32). இவருடைய மனைவி மகாலட்சுமி. ரமேஷ் மரவேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் சந்தோஷ்(3). நேற்று விடுமுறை தினம் என்பதால் குடும்பத்துடன் வெளியூர் செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தனர்.

குழந்தை சந்தோஷ் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பெற்றோர், குழந்தையை தேடிய போது அவனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்கும் இங்குமாக ஓடியுள்ளனர். அக்கம் பக்கத்தினரிடமும் குழந்தையை குறித்து விசாரித்துள்ளனர். மேலும், பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். இருப்பினும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியாக வீட்டின் முன்புறம் மூடப்பட்ட நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது குழந்தை சந்தோஷ் மூழ்கிய நிலையில் கிடந்துள்ளான். இதை பார்த்ததும் சந்தோசின் பெற்றோர் அலறி துடித்தனர். பின்னர் அவனது உடலை தொட்டியில் இருந்து மீட்ட அவர்கள், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் வினாயகம் தலைமையிலான போலீசார் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், வீட்டின் அருகே உள்ள வாலிபர் ஒருவர் அந்த தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்துள்ளார். தண்ணீர் எடுத்து விட்டு மீண்டும் அந்த தொட்டியை மூடாமல் சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த வாலிபர், தொட்டி மூடாமல் கிடந்ததால், அதன் மூடியை எடுத்து மூடிவிட்டு சென்றுள்ளார். இதற்கிடையே தான் குழந்தை சந்தோஷ் அந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்துள்ளான்.

இது தெரியாமல் அந்த வாலிபர் தொட்டியின் மூடியை மூடிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வாலிபரிடமும், பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடமும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்