கோவையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள்

கோவை புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கவுசிகா ஆறு, நொய்யல் ஆறு பகுதிகளில் சிறிய தடுப்பணைகள் கட்டப்படுகிறது.;

Update: 2019-06-08 22:45 GMT
கோவை,

கோவை மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்யாததால் ஆறுகளிலும் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் கூறியதாவது:-

நொய்யல், கவுசிகா ஆற்றுப்பகுதிகளில் 1,529 இடங்கள் கண்டறியப்பட்டு சிறிய தடுப்பணைகள், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கவுசிகா ஆறு பாயும் பகுதியில் 400 இடங்களில் முதல்கட்டமாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-வரை தனிநபர் விவசாய நிலங்களில் 7 ஆயிரத்து 124 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சராசரியாக ஒரு விவசாயிக்கு 3 ஏக்கர் 20 சென்ட் நிலத்தில் மண் வரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டின் சராசரி மழையளவு 950 மில்லி மீட்டர் பெய்யும் எனில் சராசரியாக ஒரு ஏக்கர் நிலத்தில் 38 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். கோவை மாவட்டத்தில் பெய்யும் மழையளவு 690 மில்லி மீட்டர். எனவே சராசரியாக 30 லட்சம் லிட்டர் ஒரு ஏக்கர் நிலத்தில் சேமிக்க முடிகிறது.

இந்த ஆண்டும் தொடர்ந்து தனிநபர் விவசாய நிலங்களில் தற்போது வரை 21 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மண் வரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் தொடர்ந்து மேற்கொள்ளும்போது, சராசரி மழையளவு பெய்யும் பட்சத்தில் அல்லது கூடுதலாக பெய்யும் பொழுது மழைநீர் 8,400 கோடி லிட்டர் சேமிக்க முடியும் இதனால் வரும் ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் 8 மீட்டர் உயர மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்கிறது.

நொய்யல் நதியின் உப நதிகள் நான்கு வட்டாரங்களில் பயணித்து நொய்யலில் கலக்கிறது. தற்போது அதனை உயிர்ப்பிக்கும் முயற்சியாகவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வாழும் கலை அமைப்பின் தொழில்நுட்ப உதவியினாலும் பெரியநாயக்கன்பாளையம் பிளிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறிய தடுப்பணைகள், நீர்சேமிப்பு முறைகள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை 30 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

கவுசிகா நதிக்கு வரும் அனைத்து சிற்றோடைகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அருகில் உள்ள அனைத்து சிறு, குறு விவசாய நிலங்களிலும் மண் வரப்பு கட்டும் பணி மேற்கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் வரும் ஆண்டுகளில் கவுசிகா நிதி பகுதி முற்றிலும் வறட்சி அடையாத நிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்