மாவட்டத்தில் வங்கிகளின் ரூ.81 கோடி கடன் திட்டம் வெளியீடு
விழுப்புரம் மாவட்டத்தில் வங்கிகளின் ரூ.81 கோடிக்கான கடன் திட்டம் வெளியிடப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட அளவிலான வங்கியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி அனைத்து வங்கி கிளைகளும் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கியும் தீட்டிய 2019–20–ம் ஆண்டிற்கான விழுப்புரம் மாவட்ட கடன் திட்டத்தை வெளியிட்டார்.
இத்திட்டத்தை தொடங்கி வைத்த கலெக்டர் சுப்பிரமணியன், அதன் முதல் நகலை இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் வீரராகவனிடம் வழங்கினார். அதன் பின்னர் கலெக்டர் சுப்பிரமணியன் கூறியதாவது:–
இந்த திட்ட குறிப்பு வங்கியாளர்களுக்கு மட்டுமல்லாது அரசு அலுவலர்களுக்கும் உபயோகமானது. மேலும் 2019–20–ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டத்தை காலாண்டு முறையில் நிறைவேற்ற எல்லா வங்கிகளும் ஒத்துழைக்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்திருப்பதால் ரூ.64 கோடியே 75 லட்சத்து 87 ஆயிரம் விவசாயத்திற்கு ஒதுக்கப்படுகிறது. அது நிகர ஒதுக்கீட்டில் 79.91 சதவீதமாகும். சிறிய, நடுத்தர தொழில் துறைக்காக ரூ.4 கோடியே 48 லட்சத்து 68 ஆயிரமும், முன்னுரிமை பிரிவினருக்கு ரூ.11 கோடியே 79 லட்சத்து 9 ஆயிரமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முறையே 5.54 சதவீதம் மற்றும் 14.55 சதவீதமாகும்.
மொத்த கடனில் ரூ.69 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரம் வணிக வங்கிகளும் (85.88 சதவீதம்), ரூ.7 கோடியே 33 லட்சத்து 21 ஆயிரம் (9.05 சதவீதம்) கூட்டுறவு வங்கிகளும், ரூ.4 கோடியே 10 லட்சத்து 73 ஆயிரம் (5.07 சதவீதம்) வட்டார கிராம வங்கிகளும் வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் வீரராகவன் கூறுகையில், 2019–20–ம் ஆண்டு வருடாந்திர கடன் திட்டம் ரூ.81 கோடியே 3 லட்சத்து 64 ஆயிரமாகும். இது 2018–19 வருடாந்திர கடன் திட்டம் ரூ.71 கோடியே4 லட்சத்து 4 ஆயிரத்தை விட 14.06 சதவீதம் அதிகம் என்றார்.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.