தி.மு.க. கோஷ்டி மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு 5 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

பெரம்பூரில் தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2019-06-08 22:45 GMT
பெரம்பூர், 

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர், கட்சி நிர்வாகிகளுடன் சென்று தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கொடுங்கையூர் காமராஜர் சாலையில் அவர், வாக்காளர்களுக்கு வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. சென்றபிறகு பெரம்பூர் தொகுதி 34-வது வட்ட தி.மு.க. செயலாளர் தனசேகர்(வயது 52) காமராஜர் சாலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.எல்.ஏ.வை, அதே சாலையில் எனது அலுவலகம் அமைந்து உள்ள பகுதிக்கு அழைத்து வராமல் பாதியிலேயே திருப்பி அனுப்பி வைத்துவிட்டதாக கூறி 34-வது வட்ட துணை செயலாளர் கார்த்திபன்(35) என்பவரிடம் தட்டிக்கேட்டார்.

கோஷ்டி மோதல்

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திபன் தனது ஆதரவாளர்களுடன் சென்று, வட்டசெயலாளர் தனசேகர் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்.

இந்த கோஷ்டி மோதலில் அலுவலகத்தில் இருந்த தனசேகர் மற்றும் கார்த்திபன் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து தனசேகர், கொடுங்கையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

கார்த்திபன் தரப்பினரும் மற்றொரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதை அறிந்த தனசேகரின் ஆதரவாளர்கள் அங்கு சென்று கார்த்திபனையும், அவரது ஆதரவாளர்களையும் கையாலும், கல்லாலும் சரமாரியாக தாக்கினர்.

அரிவாள் வெட்டு

அப்போது தனசேகரின் ஆதரவாளரான மதுரை என்பவர் தாக்கப்பட்டார். இதை அறிந்த மதுரையின் மகன் விக்னேஷ் (23) சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திபன் ஆதரவாளரான ரமேஷ் (40) என்பவரை அரிவாளால் வெட்டினார். இதனால் தி.மு.க.வினர் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், விக்னேசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோஷ்டி மோதலில் காயம் அடைந்த வட்டசெயலாளர் தனசேகர், வட்ட துணை செயலாளர் கார்த்திபன், சுதாகர், கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் கொடுங்கையூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் இரு தரப்பினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்