சென்னை விமான நிலையத்தில் ரூ. 69 லட்சம் தங்கம் பறிமுதல் 2 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில் துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்துவரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அதனான் (வயது 36), மலப்புரத்தை சேர்ந்த ஷிபியுல் ரகுமான் (25) ஆகியோரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
ரூ.65½ லட்சம் தங்கம்
அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை. பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அதில் இருவரும் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 950 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.
இலங்கை பெண்
இதேபோல் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த சீதாலட்சுமி (63) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து தங்க சங்கிலி மற்றும் பிரேஸ்லெட் ஆகியவற்றை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 131 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சீதா லட்சுமியிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 81 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை யாருக்காக துபாய் மற்றும் கொழும்பில் இருந்து கடத்தி வந்தனர் என இலங்கை பெண் உள்பட 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.