கோயம்பேடு அருகே மொபட்-லாரி மோதல்; 2 பேர் பலி ஒருவர் படுகாயம்
கோயம்பேடு அருகே, மொபட் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பூந்தமல்லி,
திருவேற்காடு சின்ன கோலடியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 16). இவர், தனது நண்பர்களான கோகுல்பரத்(22), சுரேந்தர்(20) ஆகியோருடன் நேற்று அதிகாலையில் ஒரே மொபட்டில் கோயம்பேட்டில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கோயம்பேடு அடுத்த மெட்டுகுளம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் 3 பேரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர்.
லாரி மோதி 2 பேர் பலி
இதில் சாலையில் விழுந்த 3 பேர் மீதும் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய விஜயகுமார், அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். சுரேந்தர் மற்றும் கோகுல்பரத் இருவருக்கும் கை, கால்கள் நசுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிருக்கு போராடிய 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுரேந்தரும் பரிதாபமாக உயிரிழந்தார். கோகுல்பரத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பலியான விஜயகுமார், சுரேந்தர் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மனோகரன்(40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து
அம்பத்தூர் மண்ணூர்பேட்டை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அம்புஜம்(75). நேற்று காலை கடைக்கு செல்வதற்காக அம்பத்தூர் எஸ்டேட் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த லோடு வேன் மோதியதில் படுகாயம் அடைந்த அம்புஜம், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லோடு வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.