அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை: “ராஜன் செல்லப்பா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து“ என்று நெல்லையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
நெல்லை,
நெல்லையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக செய்தி விளம்பரத்துறை சார்பில் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் 10 மாவட்டங்களில் அரசு பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி நெல்லையில் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம், குற்றாலம் சாரல் விழாவையொட்டி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொருட்காட்சி வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இயக்கப்பட்டு வரும் 122 பழைய பஸ்களை அப்புறப்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றுக்கு பதிலாக ஒரு மாவட்டத்துக்கு 50 பஸ்கள் வீதம் மொத்தம் 150 புதிய பஸ்கள் இயக்கப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மக்கள் தெரிவிக்கும் கருத்துகள் படியே அங்கு அணுக்கழிவு மையம் அமைப்பதா? வேண்டாமா? என்று முடிவு செய்யப்படும். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறும்.
மத்திய அமைச்சர் பதவியை பெறுவது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முடிவு செய்வார்கள். மதுரையில் ராஜன் செல்லப்பா அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை இருக்க வேண்டும் என்று கூறியது குறித்து கேட்கிறீர்கள். ராஜன் செல்லப்பா கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற பலர் மீண்டும் அ.தி.மு.க.வில் வந்து சேருகிறார்கள். மேலும் பலர் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பணகுடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க.வை சேர்ந்த முன்னணி தலைவர்கள் நடத்துகின்ற பள்ளிக்கூடங்களில் கூட இந்தி மொழியை பாடமாக கொண்டு நடத்துகின்றனர். இரட்டை வேடம் போடுவதுதான் தி.மு.க.வின் வேலை ஆகும். இருமொழி கொள்கையில் உறுதியாக, நிலைபாட்டுடன் இருப்பது அ.தி.மு.க. தான். தமிழுக்கு பல்கலைக்கழகம் கண்டவர் எம்.ஜி.ஆர்., உலக தமிழ் மாநாட்டை நடத்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா. தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தியது அ.தி.மு.க. தான்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்து பெருமைப்படுத்தியது அ.தி.மு.க. அரசு. டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்து வருவதும் அ.தி.மு.க. அரசு தான். தமிழுக்கு பெருமை சேர்க்கின்ற அரசாக ஜெயலலிதாவின் அ.தி.மு.க. அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.