எட்டயபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை
எட்டயபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 11 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எட்டயபுரம்,
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி நியூகாலனி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 40). இவர்களுடைய மகன்கள் பரதன் (15), சத்ருக்கினன் (15). இரட்டையர்களான இவர்கள் 2 பேரும் சாத்தூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். லட்சுமி உள்ளூரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். உதயகுமார் லாரி டிரைவராக வேலை பார்த்து வருவதால் 10 நாட்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மகன்கள் 2 பேரும் பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டனர். லட்சுமியும் வீட்டை பூட்டிவிட்டு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லை. இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவை உடைத்து திறந்து அதில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்.
பின்னர் வீட்டிற்கு வந்த லட்சுமி நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாசார்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.