வடக்கன்குளம் பழவூர் அருகே காணாமல் போன சிறுவன் திருச்செந்தூரில் மீட்பு

வடக்கன்குளம் பழவூர் அருகே காணாமல் போன சிறுவன் திருச்செந்தூரில் மீட்கப்பட்டான்.

Update: 2019-06-08 23:00 GMT
திருச்செந்தூர், 

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பழவூர் அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் சுயம்பு கேசவன். இவருடைய மகன் கேசவர்த்தனன் (வயது 14). இவன் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று முன்தினம் காலை பள்ளிக்கூடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றான். பின்னர் அவன் வீட்டிற்கு வரவில்லை. அவனை பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே இதுகுறித்து பழவூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கேசவர்த்தனன் வீட்டு பாடம் செய்யாததை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அவன் பள்ளிக்கு செல்ல விரும்பம் இல்லாமல் இருந்து வந்தான். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற அவன் பள்ளிக்கு செல்லாமல் மாயமானது தெரியவந்தது. அவனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை கேசவர்த்தனன் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நான் சிதம்பரபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது காரில் வந்த சிலர் என்னை கடத்தி சென்றனர். அப்போது நான் மயக்கம் அடைந்தேன். பின்னர் கண் விழித்து பார்த்தபோது திருச்செந்தூர் கோவில் முன்பு படுத்து கிடந்தேன் என்று புகார் கூறினான். உடனே போலீசார் இதுகுறித்து பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து கேசவர்த்தனனை பழவூர் போலீசில் ஒப்படைத்தனர். பழவூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சிறுவனை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்