நெல்லையில் பரபரப்பு: பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து
நெல்லையில் பழைய பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர்.
நெல்லை,
நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரை சேர்ந்தவர் விஜயராஜ். இவர் டவுனில் இருந்து ராமையன்பட்டி செல்லும் சாலையையொட்டி உள்ள இடத்தில் பழைய பேப்பர் குடோன் வைத்துள்ளார். இங்கு அவர் காகித பைகள் தயாரித்து விற்பனை செய்து வந்தார். இந்த குடோனை சுற்றிலும் வயல்வெளி அமைந்துள்ளது. இங்குள்ள வயல் வெளியில் நெல் பயிர் அறுவடைக்கு பிறகு இருந்த குப்பைகளை நேற்று சிலர் தீவைத்து எரித்துள்ளனர்.
இந்த தீ வயல்வெளி முழுவதும் பரவி பேப்பர் குடோனை சூழ்ந்தது. குடோனுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் தீ குப்பைகள் வழியாக குடோனுக்குள்ளும் சென்றது.
இதனால் குடோனுக்குள் இருந்த பழைய பேப்பர் மற்றும் பொருட்களில் தீ பற்றி எரிந்தது. காற்று பலமாக வீசியதால் தீ பயங்கரமாக எரிந்தது. இதில் இருந்து எழுந்த புகை 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவியது.
இந்த பயங்கர தீ விபத்து குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பாளையங்கோட்டை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மதியம் 2 மணி அளவில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகத்தால் உடனடியாக தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இறுதியாக பொக்லைன் எந்திரம் மூலம் கிளறிவிட்டு தண்ணீர் ஊற்றி தீயை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் குடோனுக்குள் சென்று பார்வையிட்டு தீ முற்றிலும் அணைக்கப்பட்டதை உறுதி செய்தனர். இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காகிதங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்து வந்த பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாஸ், டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் தீ விபத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக நெல்லை டவுன், ராமையன்பட்டி பகுதியில் நேற்று மதியம் பரபரப்பு ஏற்பட்டது.