திண்டுக்கல் அருகே சுற்றுலா வழிகாட்டி அடித்துக்கொலை? போலீஸ் விசாரணை

திண்டுக்கல் அருகே, சுற்றுலா வழிகாட்டி பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2019-06-08 23:15 GMT
தாடிக்கொம்பு, 

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே மதுரை-பெங்களூரு நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜஸ்டின் பிரபாகரன், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் பிணமாக கிடந்த வாலிபரின் சட்டைப்பையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்த ஒரு ஆவணத்தில், இறந்தவர் கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த முரளி (வயது 35) என்பதும், அவர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது இறந்தவர் நான்கு வழிச் சாலையில் வந்த வாகனங்களில் அடிபட்டு இறந்தாரா? என்று விசாரணை நடத்தினார். மேலும் அவருடைய உடலில் உள்ள காயங்கள் விபத்தால் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் அவரை அடித்து கொன்றுவிட்டு பிணத்தை நான்கு வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் வீசிச்சென்றார்களா? என்று விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுற்றுலா வழிகாட்டி விபத்தில் சிக்கி இறந்தாரா? அல்லது மர்ம நபர்களால் அடித்து கொல்லப்பட்டாரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. அது வாலிபர் பிணத்தை மோப்பம்பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அதையடுத்து கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். அதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்