என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பம்: 4,098 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது
நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பில் சேர விண்ணப்பித்த 4,098 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளது.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் என்ஜினீயரிங் படிப்பில் சேர இந்த ஆண்டு மே மாதம் 2-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சேவை மையத்தில் தற்போது சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து பேராசிரியைகள் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர 4 ஆயிரத்து 98 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. 2 நாட்களில் 1,280 மாணவ, மாணவிகள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நாளில் சான்றிதழை சரிபார்க்க வருகை தராத மாணவ, மாணவிகள் வருகிற 12-ந் தேதி வரை ஏதாவது ஒரு நாளில் வந்து சான்றிதழை சரிபார்த்து கொள்ளலாம். என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுகுணா, துணை ஒருங்கிணைப்பாளர் சுகந்தி மற்றும் பேராசிரியைகள் செய்து இருந்தனர்.