தர்மபுரியில் சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
தர்மபுரி நகரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தர்மபுரி,
தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் தினமும் ஓடுகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பிற வகை சரக்கு வாகனங்கள் இயங்குகின்றன. இவற்றில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், கார்கள் பிரதான சாலைகளை ஆக்கிரமித்தபடி பல இடங்களில் நிறுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக அதிக வாகன போக்குவரத்து உள்ள நகரின் முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நிற்பது வாடிக்கையாகி வருகிறது. ஷேர் ஆட்டோக்கள் தர்மபுரி பஸ்நிலையம், பூங்கா, அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் இடங்களில் வழிகளை மறித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக தர்மபுரி நகரில் உள்ள கடைவீதிகளில் சாலைகள் அகலமாக உள்ள பகுதிகளிலும் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதேபோல் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வாகனங்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும் வாகனங்களும் நுழைவு வாயில் பகுதியில் சாலையை மறித்தபடி ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் நோயாளிகள் வரும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகளுக்கு இடையூறாக உள்ளது.
இதுபற்றி தர்மபுரி நகரை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
தர்மபுரி நகரில் அதிகரித்து வரும் சாலை ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முதல் கட்டமாக சாலைகளில் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்துவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தர்மபுரி நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி முழுமையாக அகற்றவும், தேவையுள்ள இடங்களில் சாலையை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தனி இடங்களை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் வாகனங்களை நிறுத்த தனியிடங்களை உருவாக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.