தொலைநிலை கல்வித்திட்டத்தில் மருத்துவ படிப்புகள்: எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தொலைநிலை கல்வி திட்டத்தின்கீழ் மருத்துவ படிப்புகள் நடத்த அறிவிப்பு வெளியிட்ட டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-07 23:28 GMT

மதுரை,

தமிழ்நாடு டாக்டர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சீனிவாசன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்காக ஓராண்டு மற்றும் ஈராண்டு மருத்துவ பட்டய படிப்புகளுக்கு தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழான சேர்க்கை அறிவிப்பு கடந்த 11.2.2018–ல் வெளியிடப்பட்டது.

இதற்காக மத்திய அரசிடமோ, இந்திய மருத்துவ கவுன்சிலிலோ எந்தவித அனுமதியும் பெறவில்லை. எனவே தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் விசாரித்தார்.

அப்போது, ஆட்சிமன்ற குழு தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த படிப்புகள் தொலைதூரக் கல்வித்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது என்று பல்கலைக்கழகத்தின் தரப்பில் கூறப்பட்டது.

‘‘இது போன்ற படிப்புகளை தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் நடத்தக் கூடாது. எனவே மருத்துவ படிப்புகளை தொலைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதி பெறவேண்டும்’’ என இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கூறப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மதுரையில் ஐகோர்ட்டில் அவர் தீர்ப்பளித்தார்.

ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியே தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது மக்களை தவறாக வழிநடத்துவது போன்று அமைந்து விடும். எனவே, மனுதாரரின் கோரிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதமாக விதிக்கப்படுகிறது. அந்தப் பணத்தை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு செலவிடும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்