ஆசிரியர் தகுதி தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர் தகுதி தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.

Update: 2019-06-07 22:49 GMT

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கோபி சட்டமன்ற தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்களை பெற்றார். அவற்றின் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. துறை வாரியாக மத்திய அரசிடம் இருந்து சாதனைக்காக விருதுகள் பெற்று வருகிறாம். தற்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. 6 முதல் 8–ம் வகுப்பு வரை 7 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வரப்படும்.

உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 6 முதல் 8–ம் வகுப்பு வரையுள்ள பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கும் விரைவில் கொண்டு வரப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. இனி ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். வருங்காலத்தில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடும் அளவுக்கு தேர்வு முறைகள் மாற்றியமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம், கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கந்தவேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்