தேர்தலை சந்திக்க தயாராக இருக்கும்படி மகன் பேச்சு கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா? முதல்-மந்திரி குமாரசாமி விளக்கம்
கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா? என்பதற்கு முதல்-மந்திரி குமாரசாமி விளக்கமளித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
நிகில் குமாரசாமி பேச்சு
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலையும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து சந்தித்தன. இந்த கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி மண்டியாவில் போட்டியிட்டு, சுயேச்சை வேட்பாளர் சுமலதாவிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மண்டியாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நிகில் குமாரசாமி, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சட்டசபைக்கு தேர்தல் வரலாம். அந்த தேர்தலை எதிர்கொள்ள கட்சி நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?
நிகில் குமாரசாமியின் இந்த பேச்சால், கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று கூறப்படுகிறது. இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை ஆகியவற்றால் கர்நாடக அரசியலில் தினமும் ஏற்பட்டு வரும் பரபரப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலா? என்பதற்கு விளக்கமளித்து முதல்-மந்திரி குமாரசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
வாய்ப்பு இல்லை
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சியை பலப்படுத்த எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் கட்சியை பலமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நிகில் குமாரசாமி பேசியிருக்கிறார். நிர்வாகிகளை கட்சி பணிகளில் உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அவ்வாறு பேசியிருக்கிறார்.
ஆனால் ஊடகங்கள் இதை தவறாக புரிந்து கொண்டு, சட்டசபைக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரும் நிலை உள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இது உண்மைக்கு புறம்பான தகவல். எனது தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்யும். சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அவ்வாறு பேசுவது சரியல்ல.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறியிருக்கிறார்.