‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் உயர்கோபுர மின்விளக்குகள் சீரமைப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சின்னவீராம்பட்டினம் கடற் கரையில் உயர்கோபுர மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டது.

Update: 2019-06-07 21:37 GMT
அரியாங்குப்பம், 

அரியாங்குப்பத்தை அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற் கரையில் இயற்கையாகவே அதிக மணற்பரப்பு உள்ளது. இதன் அழகை ரசிக்க சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூரை சேர்ந்தவர்களும் மாலை நேரத்தில் வந்து செல்கின்றனர். இங்கு கடற்கரை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபயிற்சி பாதையுடன் கூடிய பொழுது போக்கு பூங்கா அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் 3 உயர்கோபுர மின் விளக்குகள் தனித்தனி இடத்தில் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மாலையில் அச்சமின்றி வந்துசென்றனர்.

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி

நாளடைவில் இந்த மின் விளக்குகளில் பழுது ஏற்பட்டு எரியவில்லை. மின் விளக்கு இருந்தும், அது எரியாததால் இரவில் அப்பகுதி வெளிச்சமின்றி இருண்டு கிடந்தது. இதுபற்றி கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதுபற்றி ‘தினத்தந்தி’யில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்வலம் பகுதியில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உயர்கோபுர மின்விளக்குகளை சரிசெய்தனர். மேலும் தானியங்கி முறையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மின்விளக்குகள் எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின்விளக்குகள் சரிசெய்யப்பட்டதால், இரவு நேரத்தில் அச்சமின்றி கடற்கரை அழகை மக்கள் ரசிக்க முடிகிறது. இதற்கு காரணமாக விளக்கிய ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் சின்னவீராம்பட்டினம் கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்